விலைவாசி உயர்வு, வேலையின்மை குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை: ராகுல் காந்தி!

வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசுவதில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுகிறார். அவர் இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், இந்திய அரசியல் அமைப்பை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா முயல்கின்றன. இந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு பெரிய பிரச்சனை இதுதான். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற முயல்கின்றன.

பிரதமர் மோடி இந்தியாவின் 5-6 பெரிய தொழில் அதிபர்களின் கருவியாக இருக்கிறார். நாட்டின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதும், இந்தியாவில் உள்ள பணக்கார தொழில் அதிபர்களை பாதுகாப்பதும், அவர்களின் வங்கி கடனை மன்னிப்பதும் மோடியின் வேலை. நாட்டில் உள்ள 20-25 பேருக்கு மோடி ரூ.16 லட்சம் கோடி வழங்கி உள்ளார்.

நிலவுக்கு மனிதனை அனுப்ப போகிறோம் என்று அவர் சொல்வார். ஆனால் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசுவதில்லை.
தேர்தல் பத்திரங்கள் பெற்ற விவகாரம் பிரதமர் மோடியால் நடத்தப்பட்ட மிரட்டி பணம் பறிக்கும் செயலாகும்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.