நான் காதலித்த நபர் என்னை ஏமாற்றிவிட்டார்: வித்யா பாலன்!

நடிகை வித்யா பாலன் அவரின் முதல் காதல் தோல்வி குறித்து தற்போது பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் வித்யா பாலன். ஹீரோயினை மையமாக கொண்ட கதைகளில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் குமாரின் மனைவியாக நடித்து கோலிவுட் வந்தார்.

இந்நிலையில் தான் முதல் காதல் பற்றி பேசியிருக்கிறார் வித்யா பாலன். அவர் கூறியதாவது:-

என் முதல் காதல் தோல்வி அடைந்தது. நான் காதலித்த நபர் என்னை ஏமாற்றிவிட்டார். காதல் முறிந்த கையோடு காதலர் தினத்தன்று அவரை கல்லூரியில் பார்த்தேன். நான் என் முன்னாள் காதலியுடன் டேட் போகப் போகிறேன் என என்னிடம் கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அன்று நான் நொறுங்கிப் போய்விட்டேன். ஆனால் அதை எல்லாம் தாண்டி நான் நல்லபடியாக இருக்கிறேன் என்றார்.

வித்யா பாலனும், சினிமா தயாரிப்பாளரான சித்தார்த் ராய் கபூரும் காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். சித்தார்த் பற்றி வித்யா பாலன் கூறியதாவது:-

நான் சித்தார்த்தை சந்தித்தபோது காதல் மீதான நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டேன். திருமணமே செய்யக் கூடாது என்கிற முடிவில் இருந்தேன். நான் சித்தார்த்தை சந்தித்த போது அது கண்டதும் காதல் இல்லை கண்டதும் காமம் எனலாம். சித்தார்த் மிகவும் அழகானவர். அவர் ரொம்ப தன்மையானவர். அவரின் அந்த குணம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காதலே வேண்டாம் என்று இருந்தபோது சித்தார்த்தை பார்த்தேன். 30 வயதில் நிறைய புகழ் சம்பாதித்தேன். ஆனால் அதை எல்லாம் ஷேர் செய்ய ஒருவர் வேண்டும் அல்லவா என்றார்.