அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் பிரதமராகி இருக்க முடியாது: மோடி

அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் பிரதமராகி இருக்க முடியாது என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிகாரின் கயா நகரில் நேற்று பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தேர்தல் அறிக்கை கிடையாது, உத்தரவாத அட்டை. பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுப்போம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்களை வழங்குவோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்த்தனர். கோயில் திறப்பு விழாவையும் அவர்கள் புறக்கணித்தனர். காங்கிரஸின் இளவரசர் (ராகுல்) சனாதனத்தின் சக்தியை அழிப்பேன் என்று கூறுகிறார். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனாவை ஒழித்துக் கட்ட வேண்டும். அதேபோல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என்று காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் கூறுகின்றன. இத்தகைய கட்சிகளை துடைத்தெறிய வேண்டும். பிகாரில் லாலு குடும்பத்தினர் காட்டாட்சியை நடத்தினர். தற்போதைய பிகார் முதல்வர் நிதிஷ் குமார் நல்லாட்சியை நடத்துகிறார்.

அரசமைப்பு சாசனத்தை பாஜக மாற்றும் என்று எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன. நாங்கள் அரசமைப்பு சாசனத்தையும் அம்பேத்கரையும் மதித்து போற்றுகிறோம். அம்பேத்கரின் அரசமைப்பு சாசனம் இல்லாவிட்டால் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பிரதமராகி இருக்க முடியாது.

ஏழைகள் மீது அதிக அக்கறை காட்டுவது ஏன் என்று பலர் என்னிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். நானும் அவர்களில் ஒருவன். அதனால்தான் அவர்கள்மீது அதிக அக்கறை செலுத்துகிறேன். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் காஷ்மீரில் அரசமைப்பு சாசனம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. பாஜக ஆட்சியில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீரில்அரசமைப்பு சாசனம் அமல்படுத்தப்பட்டது. உண்மையை சொல்வதென்றால் எதிர்க்கட்சிகள் அரசமைப்பு சாசனத்தை எதிர்க்கின்றன. நாடு வளர்ச்சி அடைவதை தடுக்க முயற்சி செய்கின்றன. தற்போதைய மக்களவைத் தேர்தலில் அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.