கோவையில் ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டிச் சென்றது விதிமீறல்: அண்ணாமலை

கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டிச் சென்றது போக்குவரத்து விதிமீறல் என பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சூலூர், அப்பநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் உங்கள் சகோதரன். உங்கள் வீட்டு பிள்ளை. மோடியை பிரதமராக்க எனக்கு வாக்களியுங்கள் என கன்னடத்தில் பேசினார். தொடர்ந்து தமிழில் பேசிய அவர், நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு கோடி ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் மூன்று கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இன்று நம் நாடு 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2014-ல் 11-வது இடத்தில் இருந்து இன்று 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் 3-வது இடம் பிடிக்கும். மோடியின் சிறப்பான ஆட்சியால் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது.

மோடி வேண்டாம் என்று கூறுபவர்கள், பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த தலைவர்கள் பெயரை கூறட்டும். மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. 2014-ல் மோடி இந்தியர்களுக்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலக மக்களுக்கு தேவைப்படுகிறார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வல்லமை பெற்றவர் மோடி. இவ்வாறு அவர் பேசினார்.

உணவு இடைவேளையின் போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்கு பெரிய எதிர்ப்பு இல்லை. பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும். கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டிச் சென்றது போக்குவரத்து விதிமீறலாகும். ராகுல் காந்தி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மக்களின் அன்பு மோடிக்கு உள்ளது. 60 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

சூலூர், பல்லடம் பகுதிகளில் அதிமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் பாஜக-விற்கு வந்துள்ளனர். ஜூன் 4-ம் தேதி கள நிலவரத்தை பாருங்கள். பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும். தேங்காய் கொள்முதல் என்பது மாநில பிரச்சினை. மாநில அரசு செவி சாய்க்க போவதில்லை. அதனால், பாரத் தேங்காய் திட்டம் கொண்டு வரப்படும். சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். கோவை மத்திய ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.

கோவையில் முதல்வரின் மருமகன் உள்ளார். இன்று முதல் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் கோவையில் பணியாற்ற போகிறார். தமிழகத்தின் புலனாய்வு பிரிவு இங்கு தான் உள்ளனர். கணக்கு இல்லாமல் செலவழிக்கின்றனர். பண பலத்தை வைத்து திமுக வெற்றி பெற போவதாக நம்புகிறது. அதை உடைத்து நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.