மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் ஓரங்கட்டப்படுவார்: ஜெயக்குமார்!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் ஓரங்கட்டப்படுவார் என ஜெயக்குமார் ஆருடம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பரப்புரைக் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த தேர்தல்களில் கூட்டணி வைத்து சந்தித்த அதிமுகவும் பாஜகவும் இம்முறை தனித் தனி அணி வைத்து களம் காண்கின்றன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவும், தினகரன் தலைமையிலான அமமுகவும் தற்போது பாஜக கூட்டணியில் தான் இருந்து வருகின்றன. இதனிடையே பாஜகவும் அதிமுகவும் ஒன்றின் மீது ஒன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக அதிமுக என்கிற ஒரு கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என அண்ணாமலை விமர்சிக்க, பாஜகவால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை என்றும், ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது எனவும் பதிலடி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் மாநிலத் தலைவராக ஓபிஎஸ் வருவார். டிடிவி தினகரனுக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும். தற்போதைய மாநிலத் தலைவரான அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டு கிளி ஜோசியராகத்தான் வருவார். அதிமுக என்கிற கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்களின் வழிநடத்துதல் மற்றும் அவர்களின் நல்லாசியுடன் இயங்கி வருகிறது. 31 வருடங்கள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி. 2026ல் மீண்டும் ஆளப்போகும் இயக்கம். ஆனால், அதிமுக அழிந்துவிடும் என்று அண்ணாமலை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தங்களுக்குத்தான் நல்லது என பாஜகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, “அண்ணாமலைக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் வென்றார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கட்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் வெற்றிபெற்று விட்டால் நான் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுகிறேன். பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெறவே முடியாது. பாஜகவின் தலையெழுத்து என்னவென்றால் யாருடைய முதுகிலாவது சவாரி செய்துதான் வெற்றிபெற்றாக வேண்டும். வேஸ்ட் என்பதால்தான் நாங்கள் கழட்டிவிட்டோம். இதனால் தமிழ்நாட்டு மக்களே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றும் கூறினார்.