மாநிலங்களின் உரிமைகளை காக்க மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி: எடப்பாடி!

மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் காரணத்தால் அதிமுக தனித்து போட்டியிடுகிறது என்றும் மக்களுக்கு சேவை செய்யும் இந்த இயக்கத்தை அழிப்போம் எனக் கூறுபவர்களின் கனவு பலிக்காது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இல்லத்தில் இன்று (ஏப்.,17) காலை அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை மத்திய அரசிடம் பெற்று நன்மை கிடைக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். திமுக தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் கூறப்பட்டது. ஆனால் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அறிவிப்புகள் குறைவான அளவே நிறைவேற்றப்பட்டுள்ளன ஆனால் முதல்வர் திமுக கழகத்தின் சார்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ளது என பச்சைப் பொய் கூறி வருகிறார்.

போதைப் பொருள் நடமாட்டம், வேலையில்லா திண்டாட்டம், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என்று பல பிரச்சினைகள் தமிழகத்தில் நிலவி வருகிறது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த தவறியது திமுக அரசு. மத்திய அரசு 2019-ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை. மாநில அரசு தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என தெரிவித்திருந்தது . ஆனால் அவர்களும் இதுவரை குறைக்கவில்லை. அரிசி விலை கிலோ 18 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. இதுபோல பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு மாதமாதம் திறக்கப்படும் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் காவேரி டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறி வருகிறது. இரண்டு கட்சிகளும் மேக்கேதாட்டுவில் அணைக்கட்டுவோம் எனக் கூறி வருகிறது. இன்றைய திமுக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விடமாட்டோம் என்று கூறிய ஆவண பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு கூட முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. கூட்டணியில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிடும் என கருதி தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என கருதாமல் முதல்வர் இருந்து வருகிறார். இதுவும் கண்டனத்துக்குரியதாகும்.

முதல் தலைமுறை வாக்காளர்கள் மாணவர்கள், பெண்கள் தேர்தல் அன்று வாக்கு சாவடிக்கு வந்து அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் பெண்கள் முதல் வாக்களிக்கும் வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சிலர் பொய்யான கருத்து திணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் .அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. கழக நிர்வாகிகள் தோழர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றி வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க பாடுபட வேண்டும். தமிழகம், பாண்டிச்சேரி நாற்பதிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

தேர்தல் பத்திரம் வெளியிட்டு உள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரசும் அதிகமாக நிதி பெற்றிருக்கிறார்கள். திமுகவும் தேர்தல் பத்திரம் பெற்று உள்ளது. மீனவர்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் மீட்டெடுக்க வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் காரணத்தால் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. பிரதமர் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளார். இதுபோல மத்திய அமைச்சர்கள் வந்து சென்று உள்ளனர். இதற்கு முன்பு அமைச்சர்கள் தமிழகத்துக்கு வந்து ஏதாவது திட்டத்தை தொடங்கி வைத்திருக்கலாம். வாக்குகளை வைத்து மட்டும் தமிழகத்துக்கு வந்து செல்கிறார்கள், இதனால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குகிறார்கள் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது இல்லை.

மாநில அரசு மின்தடை ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். திமுக அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருதோ அப்போதெல்லாம் மின்தடை ஏற்படுகிறது. அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது. அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்தது. அதிகமான தேசிய விருதுகளும் பெற்றது. ஏழைகளுக்கு ஏராளமான திட்டங்கள் நேரடியாக சென்றது. மக்களுக்கு சேவை செய்யும் இந்த இயக்கத்தை அழிப்போம் என கூறுபவர்களின் கனவு பலிக்காது. எங்களது கொள்கைக்கு ஒத்த கட்சிகள் எங்களது கூட்டணியில் உள்ளன. இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத்தில் நமது பிரச்சினைகளை கூற வேண்டும் என்பதால் தனித்து நிற்க வேண்டும். சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி உரிமைகளை திட்டங்களை நிறைவேற்றச் சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.