“சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மான் நீதிமன்றத்தில் கூறுகையில், “நான் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஜாமீன் பெறுவதற்காக எனது ரத்தத்தின் சர்க்கரை அளவினை கூட்ட முயற்சிப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது. ஜாமீன் பெறுவதற்காக முடங்கிப்போகும் அபாயத்தை நான் எடுப்பேனா? நான் எடுத்துக்கொண்ட உணவு அனைத்தும் கைதுக்கு முன்பாக எனது மருத்துவர் தயாரித்துக் கொடுத்த டயட் அட்டவணைபடியே வழங்கப்பட்டது.
நான் மாம்பழங்கள் சாப்பிட்டேன் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனக்கு வீட்டில் இருந்து 48 முறை அனுப்பப்பட்ட சாப்பாட்டில் மூன்று முறை மட்டுமே மாம்பழம் இருந்தது. ஏப்ரல் 8-ம் தேதிக்கு பின்னர் மாம்பழம் அனுப்பப்படவே இல்லை. மாம்பழங்கள் இனிப்பு வில்லைகள் போல தயார் செய்யப்பட்டிருந்தன. அதன் சர்க்கரை அளவு, பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியின் சர்க்கரை அளவை விடக் குறைவானது.
நான் எனது தேநீருக்கு செயற்கை சர்க்கரையையே பயன்படுத்தினேன். அமலாக்கத் துறையால் எவ்வளவு அபத்தமாக, சிறுமையாக அரசியல் செய்ய முடிகிறது. அவர்களின் அறிக்கை முற்றிலும் தவறானதாகவும், தீங்கிழைப்பதாகவும் உள்ளது. உங்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளதால், வீட்டில் பூஜையில் வைத்து ஒரே முறை அனுப்பப்பட்ட பிரசாதத்தை நான் ஆலு பூரி சாப்பிட்டதாக ஊடகங்களில் வெளியிட முடிகிறது. நான் கைதியாக சிறையில் இருப்பதால் கண்ணியமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எனக்கு உரிமை இல்லையா? 15 நிமிடம் காணொலி மூலமாக எனது மருத்துவரிடம் பேசக் கூட அனுமதி கொடுக்க முடியாத அளவுக்கு நான் குடுங்குற்றவாளியா? 75 ஆண்டுகளாக நம்மிடம் ஜனநாயகம் இருந்தது. ஆனால், இப்படி ஒரு அணுகுமுறையை முதல் முறையாக நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
கெஜ்ரிவாலின் வழக்கறிஞரின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, “அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிட்ட உணவு அவரது மருத்துவர் தயாரித்த டயட் அட்டவணையுடன் ஒத்துப்போகவில்லை” என்று குற்றம்சாட்டியது. மேலும், கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவை பராமரிக்கும் அளவுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் திஹார் சிறையில் உள்ளன” என்று தெரிவித்தது.
திங்கள்கிழமை முதல் தனது மருத்துவரிடம் தினமும் மருத்துவ ஆலோசனை பெற அனுமதி கோரிய கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பினை ஒத்திவைத்த நீதிமன்றம், தேவைப்பட்டால் சனிக்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய திஹார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, தனது ரத்ததின் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கம் குறித்து தனது மருத்துவரிடம் வாரத்தில் மூன்று நாட்கள் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவை வியாழக்கிழமை கேஜ்ரிவால் வாபஸ் பெற்றார். சர்க்கரை அளவு தொடர்பாக தனது மருத்துவரிடம் தினமும் 15 நிமிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோரி புதிய மனுவை வெள்ளிக்கிழமை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார்.