மேகதாது அணையால் தமிழகத்துக்கும் நன்மை கிடைக்கும்: குமாரசாமி

மேகதாது அணை குறித்து தமிழகத்திடம் பேசிய தீர்வு காண்போம் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை தொடர்ந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆணையம் உத்தரவு போட்டும் தமிழகத்திற்கு நியாயமான பங்கீட்டு தண்ணீர் வருவதில்லை. கடந்த ஆண்டு கர்நாடகம் தண்ணீர் திறக்காததால் காவிரி டெல்டா குறுவை பயிர்கள் காய்ந்தன.

இந்த சமயத்தில் தான் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 60 டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் வகையில் 9,000 கோடி ரூபாய் செலவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தராத காரணத்தால், மேகதாது அணையை கர்நாடகாவால் கட்ட முடியவில்லை. மேலும், மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. மேகதாது அணையால் தமிழகத்திற்குதான் அதிக நன்மை என்று கர்நாடகம் கூறுகிறது. மேகதாது அணை இல்லாத போதே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மனம் இல்லாத கர்நாடகா, மேகதாது அணை கட்டி முடித்தவுடன் தண்ணீர் திறக்கும் என்பதை தமிழ்நாடு நம்பத் தயாராக இல்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும் தமிழ்நாட்டிற்கு வரும் கொஞ்சம் தண்ணீரும் வராது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, “மேகதாது அணை விவகாரத்தில் சட்ட ரீதியாக உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் எங்கள் கூட்டணி தீர்வு காணும். மேகதாது அணை தமிழ்நாட்டு மக்களுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும். நாங்கள் தமிழ்நாட்டிடம் பேசி மேகதாது அணை பிரச்னைக்கு தீர்வை கொண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையுடன் உள்ளது. எங்கள் வெற்றி உறுதியானது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளையும் பாஜக – மஜத உள்ளடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும்” என்றும் தெரிவித்தார்.