“சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் வண்டியில்லை. அப்பா, அம்மாவிடம் வண்டி உள்ளது. என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கன்டிஷனைப் பார்த்தால் சஸ்பென்ஷனை ஆண்டுக்கு 3 முறையெல்லாம் மாற்ற முடியாது” என்றார்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்வில் சேலத்தில் நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விஷாலிடம், “வாக்குப்பதிவு நாள் அன்று சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு விஜய்யின் இன்ஸ்பிரேஷன் காரணமா?” என மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், “நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவரது தன்னம்பிக்கை பிடிக்கும். சைக்கிளில் போனதற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் வண்டியில்லை. அப்பா, அம்மாவிடம் வண்டி உள்ளது. என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனைப் பார்த்தால் சஸ்பென்ஷனை ஆண்டுக்கு 3 முறையெல்லாம் மாற்ற முடியாது. என்னிடம் காசில்லை. அதனால், சைக்கிள் வாங்கினால் ட்ராஃபிக் இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று சென்றேன்” என்றார்.
நிகழ்வுக்குப் பின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒருமுறை தான் சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். அது நடக்கும். நான் இப்போதும் சொல்கிறேன். 2026-ல் தேர்தலில் களமிறங்குவேன். ஆனால் மக்களுக்கு நல்லது செய்து என்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மக்களுக்கு நீங்கள் நல்லது செய்தால் நான் நடித்துவிட்டு சென்றுவிடுவேன். அதைத்தான் நான் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வரப்போகிறோம்?
நீங்கள் திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் நலப்பணிகள். மக்களுக்கு எதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்.பிக்கு எதாவது என்றால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுவார்களாம். என்ன கொடுமை இது?. மக்கள்தானே வரி செலுத்துகிறார்கள். அந்த வரிப் பணத்தில் நீங்கள் மட்டும் தனியார் மருத்துவமனைக்குச் செல்வீர்களா? அதைத்தான் சொல்கிறேன். நிறைய பிரச்சினைகள் இங்கே உண்டு. மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. நடிகர் சங்க கட்டிடப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் கட்டிடப்பணிகள் நிறைவடைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.