பிரதமர் நரேந்திர மோடி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார்.
“அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா? மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச் செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது” என்றெல்லாம் ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இதுபோன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை. நாடு முழுவதும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்டரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதல்வராக இருந்தபோது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும், கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை. நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவறுப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது.
பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதை இந்தியத் தேர்தல் ஆணையம் மவுனமாகக் கடந்து போனால் அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்தில்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மமக வலியுறுத்துகிறது. இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.