முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்திய நிலஅளவை துறையின் ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டும் பகுதியை குத்தகை விடுதல் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளதாவது:-
முல்லை பெரியாறு நீர் பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியார் – குமிளி கிராமத்தில் உள்ளது என்பது நில அளவைத் துறையால் 1924ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தை ஆய்வுக்குழு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் மெகா வாகன நிறுத்துமிடம் கட்டும் இடத்தின் மூலப்பகுதி, தரை தளம் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்ய தவறிவிட்டது. எல்லையை நிர்ணயம் செய்யும் போது தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இந்திய நில அளவைத்துறை இந்த ஆய்வை தனியாகவே நடத்தியுள்ளது.
மேலும் அந்த விவரங்களை தமிழக அரசுக்கு தரவில்லை.
அதேபோல மெகா வாகன நிறுத்துமிடம் என்பது உணவகம், பேட்டரி வாகன சார்ஜ் செய்யுமிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வரவேற்பறை, பொழுபோக்கு இடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. எனவே அந்த பகுதிகளையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். அதனை செய்ய நில அளவைத்துறை தவறிவிட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.