“நீதித் துறையில் தங்களின் செல்வாக்கை பாஜக பயன்படுத்துகிறது. இண்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம்” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணி நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு தரும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம் அதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை திரிணமூல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்” என்று அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “நீதித் துறையில் தங்களின் செல்வாக்கை பாஜக பயன்படுத்துகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சேர்ப்பு செயல்முறையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது சட்ட விரோதமானது. வேலை இழந்த மக்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம். அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்” என்று பேசினார்.