ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். 2001 – 2006 அதிமுக அரசில் வரை பொதுப் பணி, வருவாய் துறைகளின் அமைச்சராக இருந்தார். சில மாதங்கள் முதல்வராக பதவியும் வகித்தார். இந்த சமயத்தில் பதவியை முறைகேடாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது 2006 திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் தேனி நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. பிறகு இவ்வழக்கு சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் அதிமுக அரசு அமைய ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சரானார். இந்த சமயத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று ஓபிஎஸ்-ஐ சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டது 2012ஆம் ஆண்டு. அதன்பிறகு 2021 வரை அதிமுக ஆட்சிதான் நடந்தது. அதன்பிறகு வந்த திமுக அரசும் ஓபிஎஸ் சொத்துக் குவிப்பு வழக்கை கையில் எடுக்கவில்லை. ஆனால், ஓபிஎஸ் வழக்கை சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மறுஆய்வுக்கு எடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக உத்தரவிட்டார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதை எதிர்த்து, அதற்கு தடை கோரி ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து வழக்கினை எதிர்கொண்டு இறுதி வாதங்களை முன்வைத்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தில், அரசு தலைமை வழக்கறிஞர், அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் யோசனையை கேட்ட பிறகுதான் வழக்கினை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்த சூழலில் ஓபிஎஸ்-ஐ விடுவிக்க வேறு காரணம் எதுவும் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது சகோதரர் ஓ.ராஜாவும் இணைக்கப்பட்டுள்ளார். ஓ.ராஜா தரப்பு முன்வைத்த வாதத்தில், “சபாநாயகர், அரசு தலைமை வழக்கறிஞர், குற்றவியல் வழக்கறிஞரின் ஆலோசனை பெற்ற பிறகே வழக்கு தொடர அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார். மேலும், “ஓபிஎஸ் உள்பட எங்களை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே, தற்போது இவ்வழக்கை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, நீண்ட இடைவெளிக்கு பிறகு சொத்துக் குவிப்பு வழக்கை மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவுபெற்றன.
இதனையடுத்து வழக்கினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதங்களை முன் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.