வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தத் துக்கான அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. நேற்று இந்த வழக்குத் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தியாவில் 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பரவலான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஒப்புகைச் சீட்டுஇயந்திரம் (விவிபேட்) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, வாக்காளர்கள் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும்போது, தாங்கள் வாக்களிக்கும் சின்னத்தில்தான் வாக்குப் பதிவானதா என்பதை ஒப்புகைச் சீட்டு மூலம் உறுதி செய்ய முடியும். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மட்டும் எண்ணப்படும். ஒரு சில இடங்கள் தவிர்த்து, மற்ற இடங்களில் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படுவதில்லை. இந்தச் சூழலில், சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், வாக்குப் பதிவுஇயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் ஒப்புகைச் சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் உச்ச நீதிபதிகள் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் சில கேள்விகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தனர்.
“மைக்ரோ கண்ட்ரோலர் கருவி கண்ட்ரோலிங் யூனிட்டில் உள்ளதா அல்லது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவியில் ஒரே ஒருமுறை மட்டும்தான் மென்பொருளை பதிவேற்றம் முடியுமா?” என்று நீதிபதிகள் சந்தேகங்களை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த அதிகாரி, “கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபேட் ஆகிய மூன்றும் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர் உதவியுடன் இயங்குகின்றன. ஒருமுறை பொருத்தப்பட்டால், அவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ள முடியாது. தேர்தல் முடிந்ததும் மூன்று இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு 45 நாள்கள் பாதுகாக்கப்பட்டும். ஏதேனும் வழக்குத் தொடர்ப்பட்டால், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் மட்டும் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.