அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததையடுத்து அங்கித் திவாரி தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜாமின் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. எனினும், உச்சநீதிமன்றம் அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த மார்ச் 20ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், மாநில அரசு அனுமதி இன்றி வெளியூர் செல்லக் கூடாது, நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கு சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து தளர்வு கோரி அங்கித் திவாரி கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். அங்கித் திவாரிக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் மனுவை தள்ளுபடி செய்தது திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனா உத்தரவிட்டுள்ளார்.