கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்: துரைமுருகன்!

காவிரியில் உரிய நீர் பங்கை திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடைபெற்றது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டு அரசின் பிரதிநிதிகளாக ஆர். சுப்பிரமணியன், எம். சுப்பிரமணியன், கர்நாடகா எம்.எல்.சி. மகேஷா, கேரளா உறுப்பினர் ப்ரியேஷ், புதுவை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், மத்திய நீர்வளத்துறையின் கோவை பிரிவு தலைமைப் பொறியாளர், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தற்போதைய மழை அளவு, கர்நாடகாவில் காவிரி அணைகளில் நீர் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டு அரசு தரப்பில், பிப்ரவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 28-ந் தேதி வரை தமிழ்நாட்டுக்கு 7.5 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 2.5 டிஎம்சி நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. எஞ்சிய 5 டிஎம்சி நீரை கர்நாடகா அரசு திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நடப்பு மாதத்துக்கு கர்நாடகாவில் இருந்து 2.5 டிஎம்சி நீர் திறந்துவிடப் பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல் கர்நாடகா, காவிரி அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை; இதனால் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைத் திறக்க முடியாது என்றது. மேலும் 2.5 டிஎம்சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும். அதே நேரத்தில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோருவது சரியானது அல்ல. தற்போது திறந்துவிடப்படும் தண்ணீரும் கடுமையான வெப்பத்தால் பாசனத்துக்கு சென்றடையாது என கர்நாடகாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்திருந்தார். இது தற்போது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க முடியாது என கர்நாடகா மீண்டும் தெரிவித்துள்ளது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், நீதிமன்றத்தை மத்திய அரசும் கர்நாடகா அரசும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகின்றன. ஒருநாளாவது தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பங்கை திறந்துவிடுவோம் என கர்நாடகா அரசு கூறிதான் இருக்கிறதா? மழையே பெய்தாலும் தண்ணீர் குறைவாக இருக்கிறது; காவிரி நீரைத் திறக்கமாட்டோம் என்பதுதான் கர்நாடகாவின் பதிலாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு வழக்கம் போல உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யும் என்றார்.