“நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை பெரிய ஆயுதமாக மாற்றி உபயோகித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அசாமின் துப்ரியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது:-
கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் பாஜகவினர் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். பிரஜ்வால் ரேவண்ணா இந்தியாவை விட்டு வெளியேறுவதை பிரதமர் மோடி தடுக்கவில்லை. பிரதமர் மோடி சாதாரண மக்களின் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார். அதனால் மக்கள் படும் துயரம் அவருக்கு புரியவில்லை.
நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதை நிரப்புவோம். பாஜக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும், ஆனால் நீங்கள் வாழ்க்கையை நடத்தவே போராடுகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.