ஆபாச வீடியோக்களில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் கோரிக்கையை சிஐடி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை நாசமாக்கி 3,000 ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்திருந்தது பென் டிரைவ்கள் மூலம் கர்நாடகா முழுவதும் பரவியது. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் ஹாசன் சென்ற எஸ்.ஐ.டி.அதிகாரிகள் குழு 3,000 ஆபாச வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அத்துடன் ஆபாச வீடியோக்களில் இருக்கும் பெண்கள் சிலரை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். சில பெண்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அழைத்தும் எஸ்.ஐடி. அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பிரஜ்வல் ரேவண்ணா, சமூக வலைதளங்களில் தம் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியிருந்தார். மேலும் எஸ்.ஐ.டி. அதிகாரிகளை நேரில் சந்தித்த பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கறிஞர்கள், வெளிநாட்டில் இருப்பதால் அவர் ஆஜராக ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்தனர். ஆனால் இந்த அவகாசத்தை தர எஸ்.ஐ.டி. மறுத்துவிட்டது. அத்துடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதிலும் எஸ்.ஐ.டி. தீவிரமாக இறங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக எஸ்.ஐ.டி. தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ்-தேடும் குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணா மீதான எஸ்ஐடி பிடி இறுகிவிட்டது என்றே கூறப்படுகிறது.
முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை யார் வெளியிட்டது என ஒரு சர்ச்சை பாஜக- ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே வெடித்திருக்கிறது. அதேபோல, பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய பாஜக அரசின் உதவியுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் தப்ப விட்டார் என குற்றம்சாட்டியிருக்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஒக்கலிகா கவுடா ஓட்டுகளுக்காகவே தேர்தல் முடியும் வரை பிரஜ்வல் மீது எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்காமல் இருந்தது கர்நாடகா காங்கிரஸ் அரசு எனவும் அமித்ஷா குற்றம் சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.