தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்!

தேர்தல் விவரங்களை வெளியிட காலதாமதமானதால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல், முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த 11 நாள்களுக்குப் பின் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றியதன் காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கபில் சிபல் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் நம்பத்தகுந்ததாக உள்ளதா?

முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தபின் அதற்கான தரவுகள் 11 நாள்களுக்கு பின்னரே தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அதிலும், வாக்கு எண்ணிக்கை இல்லாமல், சதவீதம் மட்டுமே காட்டப்படுகிறது. இதற்கான காரணமும் தெரியவில்லை. இதுகுறித்த விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தெளிவுபடுத்தவேண்டும்.

இதற்கு முன்பிருந்த தேர்தல் ஆணையர்கள் வாக்குப்பதிவு முடிந்த அன்றோ, அல்லது மறுநாளிலோ அதுகுறித்தத் தரவுகளை பதிவேற்றம் செய்து விடுவார்கள். இந்த முறை காலதாமதம் ஆகியிருப்பது மக்களிடையே தேர்தல் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.