கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இதய பாதிப்பு, ரத்தம் உறைதல் உள்ளிட்ட ஆபத்துகள் நேரிடுவதாக அதை தயாரித்த அஸ்ட்ராஜென்கா நிறுவனமே கூறியுள்ள நிலையில், அதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், பல்வேறு நாடுகள் இதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. பின்னர் இந்த தடுப்பூசியை அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்தது. இதன் காப்புரிமையை பெற்று இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்தது. இது ஒருபுறம் இருக்க, இந்த கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைவதாக அப்போது செய்திகள் வந்தன. ஆனால், இவை வெறும் வதந்தி என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். பலர் இந்திய தயாரிப்பான கோவாக்சின், ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர்.
இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு முதலாக இந்தியாவில் பலர் இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். 15 வயது பள்ளி மாணவன் முதல் 35 வயது நபர் வரை இவ்வாறு உயிரிழப்பது அதிகரித்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசிகள் தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில்தான், இந்த இளவயது மரணங்களுக்கும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு, கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரித்த அஸ்ட்ராஜென்கா நிறுவனம் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிதாக உடலில் பல பகுதிகளில் ரத்தம் உறைதல் நோய் ஏற்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. மேலும், இதயம், நுரையீரல், கால் ஆகிய பகுதிகளில் ரத்தமும், சில நேரங்களில் ரத்தத் தட்டுகள் கூட உறைவதாக அஸ்ட்ஸாஜென்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்திகள், ஊடகங்களில் வெளியானதை அடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், “கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் இதுபற்றி அறிக்கை அளித்துள்ளது. ஆனால், வல்லுநரகளின் ஆய்வு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வந்த பிறகுதான் அதுபற்றி நாம் கருத்து தெரிவிக்க முடியும்” என அவர் கூறினார்.