கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு தனி ரசிகர் படையே உண்டு. அரசியல் விமர்சனங்களை மிக காட்டமாக முன்வைக்கும் சவுக்கு சங்கர் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அரசியல் ரீதியாக பேசும் சவுக்கு சங்கர் சில நேரங்களில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தடாலடியாக பேசி வருகிறார். அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்துப் பேசி வந்த சவுக்கு சங்கர் சமீப காலமாக திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாமல் காவல் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளையும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சவுக்கு சங்கர் பேசி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவருடன் இணைந்து பணியாற்றும் ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த சூழலில் தற்போது சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்றனர்.