மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜெயக்குமாரின் உடலை, உவரி போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஞாயிறு காலை ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
ஒரு நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தற்போது உயிரிழந்துவிட்டார். அவரது மறைவு எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று மாலைக்குள் ஒரு ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்பி என்னிடம் கூறியுள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், யாருடைய பெயர்கள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால்தான், ஜெயக்குமார் உயிரிழப்புக்கு யார் காரணம்? என்பது தெரியவரும். மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து, கட்சித் தலைமைக்கு அறிக்கை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்களை எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், பணம் படைத்தவராகவோ, மிகப்பெரிய அரசியல்வாதியாகவோ இருந்தாலும்கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ளதாக எனது கட்சிக்காரர்கள் என்னிடம் கூறினர். அதேபோன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. எனவே இந்த மரணத்தில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இதுதொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “விசாரணை நடத்தலாம் என்று நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளன. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது எங்களுக்கு தெரிகிறது. எனவேதான் நாங்கள் மீண்டும், மீண்டும் சொல்கிறோம், வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் உயிர் இழப்புக்கான காரணம் வெளியே வரும்” என்று கூறினார்.
இந்நிலையில் “நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகியோரிடம் இருந்து 89 லட்ச ரூபாயை கண்டிப்பாக வசூலிக்க வேண்டும்” என ஜெயக்குமார் தனது மருமகனுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
அக்கடிதத்தில், “நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தனக்கு 78 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதே போல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு 11 லட்சம் ரூபாய் தர வேண்டும். இருவரிடமிருந்தும் மொத்தம் 89 லட்சம் ரூபாய் கண்டிப்பாக வசூலிக்கப்பட வேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயக்குமாரிடம் இருந்து யார் யார் எவ்வளவு பணம் வாங்கி உள்ளனர் என்பது தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினர் யாரும் தான் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு யாரையும் பழி வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த கடிதம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஜெயக்குமார், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு ‘மரண வாக்குமூலம்’ எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலரது பெயர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்களை குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் லட்சக்கணக்கில் பணம்வாங்கிக் கொண்டு, அரசு ஒப்பந்தங்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.