கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அவர் மதுரை அழைத்துச் செல்லப்பட்டார்.
சவுக்கு யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர். இவர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தேனியில் இவரைப் பிடித்த போது கஞ்சா வைத்து இருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக திருச்சி போலீஸார் பதிவு செய்திருந்த அவதூறு வழக்கு தொடர்பாக, திருச்சி போலீஸார் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று (மே 8) மீண்டும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் பதிவான கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி தனிப்படை போலீஸார் இன்று (மே 8) காலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.