எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரன், அதிக உடல் பருமன் காரணமாக சென்னை தாம்பரம் அருகே பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அண்மையில் ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஹேமச்சந்திரனுக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை தொடங்கிய அடுத்த 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ஹேமச்சந்திரன், தவறான சிகிச்சை காரணமாக இறந்துவிட்டதாகவும், மயக்க மருந்து கொடுத்ததில் சந்தேகம் உள்ளதாகவும், மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த இளைஞர் ஹேமசந்திரன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உடல் பருமன் சிகிச்சையின்போது உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்தது தமிழக மருத்துவத்துறை. அந்த விசாரணை குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி, அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், கொழுப்பு நீக்க சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை களைந்து சுகாதாரத்துறையை நாடினால், மீண்டும் ஆய்வு செய்து மருத்துவமனையை திறக்க அனுமதி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் போதிய உயிர் காக்கும் சிகிச்சைக்கான வசதிகள் இல்லை என்றும், போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லை என்பது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.