ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கு அவ்வப்போது பஞ்சாயத்துகள் வெடித்து வந்திருக்கின்றன. இந்நிலையில், இன்று திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஏராளமான ஊழியர்கள் மருத்துவ விடுப்பை எடுத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று ஏராளமான ஊழியர்கள் திடீரென மருத்துவ விடுப்பில் சென்றிருக்கின்றனர். இதனால், ஏர் இந்தியாவின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பல தாமதமாக புறப்பட்டு சென்றிருக்கின்றன. அதேபோல 78 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பெங்களூரு, தில்லி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சில விமான நிலையங்களில் பயணிகள் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நேற்றிரவு முதல் எங்கள் ஊழியர்கள் திடீரென மருத்துவ விடுப்பு எடுத்திருக்கிறார்கள். எனவே விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த சிரமத்திற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் பயணத்திற்கான பணத்தை திரும்ப கொடுக்க தயாராக இருக்கிறோம். அல்லது அவர்கள் வேறு நாட்களில் பயணம் மேற்கொள்ள முன்வந்தால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க தயார். ஊழியர்கள் விடுப்பில் சென்றுள்ள விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் விமானங்கள் இயங்குவதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்திடம் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, டாடா வசம் சென்றதிலிருந்து பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. குறிப்பாக ஏர் இந்தியா நிர்வாகத்திற்கும், கேபின் க்ரூ ஊழியர்களுக்கும் இடையே பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு, ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இருப்பினும் இந்த பஞ்சாயத்து தீர்க்கப்படவில்லை. எனவேதான் இந்த திடீர் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது என்று சொல்லப்படுகிறது. ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இருக்கும் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.