வெளிநாடுகளில் உற்பத்தியாகும் போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு, மத்திய பாதுகாப்பு முகமைகளின் தோல்வியே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
ஒரு பிரதமர் நாட்டுக்கும், மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருக்க வேண்டும். கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மக்களவையில் விவாதிக்க முடியாது என்று கூறும் மத்திய அரசு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மட்டும் அதுதொடர்பான ஆவணங்களை எப்படி கொடுத்தது.
தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அண்ணாமலைக்கு இந்த ஆவணங்களை கொடுத்ததாக ஓர் அதிகாரி கையெழுத்திட்டுள்ளார். அவர் வெளியுறவு துறையில் பணியிலேயே இல்லை. பொய்யான தகவலை அண்ணாமலை வெளியிடுகிறார். அதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சர் பேசுகிறார். பிரதமர் அந்த கருத்தை சமூக வலைதளத்தில் பகிர்கிறார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடர உள்ளோம்.
வெளிநாடுகளில் உற்பத்தியாகும் போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு, மத்திய பாதுகாப்பு முகமைகளின் தோல்வியே காரணம். தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் வருவதை அவர்கள்தான் தடுக்க வேண்டும். அதானி துறைமுகம் வழியாகத்தான் போதைப் பொருட்கள் உள்ளே வருகின்றன. தமிழக இளைஞர்கள் போதைபழக்கத்துக்கு அடிமையாவதைபார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. அதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.