செஞ்சி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் நெல்மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இயற்கை பேரிடர்கள், பொய்த்துப் போன பருவமழை, பயிர்க்காப்பீடு பெறுவதில் சிக்கல், தண்ணீர் பற்றாக்குறை, மும்முனை மின்சாரத்திற்கு தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இரவு, பகல் பாராமல் பாடுபட்டு விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாக்கத் தவறிய உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
விற்பனைக்காக கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், எந்தவித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நீண்ட நாட்கள் தேக்கி வைப்பதுமே நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, செஞ்சி நெல்கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவரும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், தாமதமாகும் பட்சத்தில் கொட்டகை அமைத்து மழையில் பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.