டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக்கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்று வருகின்றன. கெஜ்ரிவாலின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர். ஆனால், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இன்னும் நாங்கள் பதில் அளித்து முடிக்கவில்லை என்று அமலாக்கத்துறை கூறியது. ஜாமீனில் வெளியே வந்தாலும் அரசு கோப்புகளில் எதுவும் கையெழுத்திட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இதனிடையே, இன்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்தது. அதில் “கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளிக்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. சட்டம் அனைவருக்கும் சமமானது. பிரசாரம் செய்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது. அரசியல் அமைப்பு படியோ அல்லது சட்டப்பூர்வ உரிமையும் இதற்கும் கிடையாது” என்று தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில் தான் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதாவது கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வரை ஜாமீன் கோரப்பட்டு இருந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ஆம் தேதி கைதான கெஜ்ரிவால் இத்தனை காலம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு அனைத்து தொகுதிகளுக்கும் வரும் மே 25ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக அங்குத் தனித்துக் களமிறங்கும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றனர். டெல்லியில் ஆம் ஆத்மி 4 சீட்களிலும் காங்கிரஸ் 3 சீட்களிலும் போட்டியிடுகிறது.