1965 மணி நேரம், 163 பேர் உழைப்பில் உருவான அலியா பட் புடவை!

எனது புடவை பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அலியா பட் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ‘மெட் காலா’ என்ற பேஷன் நிகழ்ச்சியில், இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அலியா பட் அணிந்து வந்த புடவை, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதுகுறித்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் அலியா பட், அதில் கூறியிருப்பதாவது:-

இயற்கையே எல்லாவற்றிலும் பெரிது. இதை வைத்துதான் எனது புடவை தீம் உருவாக்கினோம். எம்ப்ராய்டரி மற்றும் பீட்ஸ், விலைமதிப்பற்ற ஸ்டோன்ஸ் ஆகியவற்றை வைத்து, கடந்த 1920களின் ஸ்டைலில் புடவை, எனது மேக்கப், ஹேர்ஸ்டைல் வடிவமைக்கப்பட்டது.

இப்புடவையின் நிறம் பூமி, வானம், கடல் ஆகிய இயற்கையைப் பிரதிபலிக்கிறது. புடவையை உருவாக்க 163 பேர் பணியாற்றினர். மாஸ்டர் கைவினைஞர்கள், எம்ப்ராய்டரி கலைஞர்கள், டை கலைஞர்கள் 1,965 மணி நேர உழைத்துள்ளனர். அப்படி உருவான புடவை பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.