75 வயதுக்கு பிறகும் மோடிதான் பிரதமர்: அமித்ஷா!

75 வயதுக்குப் பிறகும் நரேந்திர மோடி பிரதமராக நீடிக்க முடியாது என்று பாஜக சட்டதிட்டத்தில் எங்கும் எழுதப்படவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில் அளித்து உள்ளார்.

50 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு நாள் கழித்து இன்று ஆற்றிய உரையில், 2024 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பது அமித் ஷாவுக்கு வாக்களிப்பதாக அர்த்தம். ஏனெனில் நரேந்திர மோடி 75 வயதை எட்டிய பிறகு அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்றும், நரேந்திர மோடி ஓய்வு பெற்ற பிறகு அமித்ஷா பிரதமராவார் என்று கூறி இருந்தார்.

“இவர்கள் இந்தியா கூட்டணியிடம் தங்கள் பிரதமர் வேட்பாளருக்கான முகம் யார் என்று கேட்கிறார்கள். நான் பாஜகவிடம் கேட்கிறேன், அவர்களின் பிரதமர் யார்? அடுத்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 75 வயதானவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை அவர் உருவாக்கி இருந்தார். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் 75 வயதை எட்டியதால் ஓய்வு பெற்றார்கள். அதன்படி நரேந்திர மோடி அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார். அமித்ஷாவை பிரதமராக்க அவர் வாக்கு கேட்கிறார். மோடிஜியின் வாக்குறுதியை அமித் ஷா நிறைவேற்றுவாரா? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களின் கட்சித் தலைவர்களும் தங்கள் ரேடாரில் உள்ளனர், பாஜக ஆட்சிக்கு வந்தால், அவர்கள் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மாற்றுவார்கள், ஏனெனில் பாஜக ‘ஒரே நாடு, ஒரே தலைவர்’ பாதையில் செல்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலில் இந்த பேச்சுக்கு தெலங்கானாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”பிரதமர் மோடிக்கு 75 வயது ஆவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சியடைய எதுவும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குழுவினருக்கு நான் சொல்ல விரும்புகிறேன், மோடிஜி 75 வயதை அடைவதில் நீங்கள் மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. அவர் பிரதமராக முடியாது என்று பாஜகவின் அரசியலமைப்பில் எந்த இடத்திலும் எழுதப்படவில்லை. அவர் பிரதமராக பதவியேற்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வார். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை” என கூறி உள்ளார்.