மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா குடும்பத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பஞ்சாபில் பரபல பாடகராக இருந்த சித்து மூஸேவாலா, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த நிலையில், சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை மாநில அரசு கடந்த மே 29-ஆம் தேதி திரும்பப் பெற்ற நிலையில், அன்றைய தினமே மா்ம நபா்களால் மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இந்நிலையில், வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி நாடு திரும்பிய நிலையில், இன்று சித்து மூஸேவாலாவின் சொந்த ஊரான மான்சா மாவட்டத்திலுள்ள மூசா கிராமத்திற்கு நேரில் சென்று சித்துவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ராகுலுடன், மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் பிரதாப்சிங் பாஜ்வா ஆகியோர் உடன் சென்றனர். ராகுல் காந்தியின் வருகையையொட்டி, சித்துவின் கிராமம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.