கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி எடுத்தி வந்தது. கடந்த 4ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், மேலும் வெப்பம் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். ஆனால், கோடை வெயில் தணிந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்வித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஆகவே, மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பதாகவும் தினகரன் சுட்டிக்காட்டினார்.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை வழக்கம்போல அலட்சியமாக எதிர்கொள்ளக் கூடாது என்றும், கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், “வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரை ஓரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதோடு, கனமழை தொடரும் பட்சத்தில் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், நிவாரண முகாம்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன், வானிலை மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து, எச்சரிக்கையை சரிவர கண்காணித்து அடுத்து வரும் சில தினங்களில் பெய்யக்கூடிய மழையின் அளவை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் பரவக்கூடிய நோய்த் தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.