ராஷ்மிகா விளம்பரத்தை இயக்கியதே அமலாக்கத்துறை தான்: கேரள காங்கிரஸ்!

அடல் சேது பாலம் குறித்து நடிகை ராஷ்மிகா பாராட்ட, கேரள காங்கிரஸ் இந்த விளம்பரத்தை இயக்கியதே அமலாக்கத்துறை தான் எனவும், அதில் ராஷ்மிகாவின் நடிப்பு நன்றாக இருந்ததாக விமர்சித்துள்ளது.

தெலுங்கில் நடித்து பிரபலமாகி தற்போது தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த சில நாட்களாக தேசிய அரசியலிலும் பேசுபொருளாக மாறி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை – நவிமும்பை நகரங்களை இணைக்கும் 22 கிலோமீட்டர் அடல் சேது கடல் பாலம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. நாட்டின் மிக நீளமான கடல் வழிப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த நிலையில் தற்போது அங்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா, “மும்பை – நவிமும்பை இடையே இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான அடல் சேது கடல்வழி பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 20 நிமிடங்களில் பயணம் செய்யலாம். இது சாத்தியமாகும் என்று யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாகத்தான் நம்மால் எளிதில் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது நிச்சயம் எனக்கு பெருமை சேர்த்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியை பாருங்கள் இது மிகவும் அற்புதமானதாக இருக்கிறது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்டம் அபாரமாக உள்ளது. நவிமும்பையிலிருந்து மும்பை, கோவா முதல் மும்பை, பெங்களூர் முதல் மும்பை வரை என அனைத்து பயணங்களும் மிக எளிதாகவும் அற்புதமான உள்கட்டமைப்புடன் செய்யப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்தவரை இந்தியாவை யாராலும் தடுக்க முடியவில்லை.. தற்போது நாட்டின் வளர்ச்சியை பாருங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்து இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்..” என கூறியிருந்தார்.

ராஷ்மிகாவின் அந்தப் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகாவின் பதிவைப் பகிர்ந்திருந்த அவர், “மக்களுடன் இணைந்திருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறொன்றுமில்லை” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை பகிர்ந்த ராஷ்மிகா பிரதமருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இப்படியாக இரு நாட்களாக இந்த ஷேரிங் விவகாரம் ஓடிக் கொண்டிருந்த நிலையில், ராஷ்மிகா போட்டது பெய்டு ப்ரோமோஷன் எனவும், அந்த விளம்பரத்தை இயக்கியதே அமலாக்கத்துறை தான் எனவும், அதில் ராஷ்மிகாவின் நடிப்பு நன்றாக இருந்ததாக கேரள காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அன்புள்ள ரஷ்மிகா மந்தனா, பணம் செலுத்தும் விளம்பரங்களையும், பினாமி விளம்பரங்களையும் இதற்கு முன் தேசம் பார்த்திருக்கிறது. அமலாக்கத்துறை இயக்கிய விளம்பரத்தை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்த விளம்பரம் நன்றாக உள்ளது, நீங்களும் சிறப்பாக நடித்துள்ளீர்கள்.

உங்கள் விளம்பரத்தில் அடல் சேது காலியாக இருப்பதை நாங்கள் கவனித்தோம். கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், மும்பையில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்று முதலில் நினைத்தோம், எனவே நாங்கள் எங்கள் மும்பை காங்கிரஸ் கட்சி நண்பர்களுடன் சேர்ந்து சோதனை செய்தோம். ராஜீவ் காந்தி பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு பாலத்தில் அதிக ட்ராஃபிக் இருப்பதாக எங்களுக்குத் தெரிவித்தனர்.. மேலும் ஆதாரத்துக்காக வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பாருங்கள்.. உண்மை எது என தெரியும்.. அதிக மக்கள் இதனை சிலர் நம்ப மாட்டார்கள்.. அவர்களை நம்பவைக்க இந்த ஒரு வீடியோ மட்டும் போதாது.. எனவே சில தரவுகளை சேகரிக்க முடிவு செய்தோம்.

5.6 கிமீ நீளமுள்ள பாந்த்ரா-வொர்லி கடல் பாலம், காங்கிரஸ் அரசால் ₹1,634 கோடி செலவில் கட்டப்பட்டு 2009ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அமலாக்கத்துறை விளம்பரங்கள் குறித்து அப்போது நாங்கள் கேள்விப்படவில்லை. சீ லிங்க் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு காருக்கு ₹85 வசூலிக்கும் பாந்த்ரா-வொர்லி சீ லிங்கில் இருந்து மார்ச் 2022ல் மட்டும் ₹9.95 கோடி வசூலிக்கப்பட்டது. விரிவான தரவு MSRDC இணையதளத்தில் கிடைக்கிறது. இப்போது அடல் சேது பாலத்தின் வெற்றியை ஆராய்வோம். இது ₹17,840 கோடி செலவில் கட்டப்பட்டது, ஒரே பயணத்திற்கு ஒரு காருக்கு ₹250 கட்டணம் – சாமானியர்களால் தாங்க முடியாத தொகை. தொடங்கப்பட்டதிலிருந்து, ஜனவரி 12 முதல் ஏப்ரல் 23 வரையிலான 102 நாட்களில் மொத்தம் ₹22.57 கோடி வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் மாத வருமானம் வெறும் ₹6.6 கோடி. இந்த விகிதத்தில், ₹17,840 கோடி முதலீட்டை மீட்பதற்கு 225 ஆண்டுகள் ஆகும், வட்டிக்கு கணக்கு இல்லை.

பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்புடன் ஒப்பிடுகையில் சுமார் 20% வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை இது குறிக்கிறது. திறப்பு விழாவிற்கு முன் மதிப்பிடப்பட்ட மாத வருவாய் ₹30 கோடியாக இருந்தது, இதன் விளைவாக ஒவ்வொரு மாதமும் ₹23.4 கோடி பற்றாக்குறை ஏற்படும்! MMRDA வின் தரவைப் பகிரத் தயக்கம் தெளிவாகத் தெரிகிறது. புதிய பாலத்தை முயற்சிக்கும் மும்பைவாசிகளின் ஆரம்ப உற்சாகம் இந்த புள்ளிவிவரங்களில் அடங்கும். மும்பைவாசிகள் ஏன் பாலத்தை பயன்படுத்துவதில்லை என்பது பற்றி ஒரு வீடியோ போட முடியுமா என விமர்சித்துள்ளனர்.