சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியது குறித்து கவலைப்படும் நீங்கள்.. ஒரு பெண் என்னை கடந்த 15 ஆண்டுகளாக தவறாக பேசிக் கொண்டிருந்த போது அரசும், எல்லா ஊடகவியலாளர்களும் கவலைப்படாமல் கொண்டாடிக் கொண்டிருந்தீர்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையுடன் கூறியுள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்த மே-18 நாளின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. பிறகு ஏன் பிரபாகரனின் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும். நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான்.. அந்த பெயருக்கே பயமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் விவகாரம் குறித்து பேசிய அவர்,” தம்பி சவுக்கு சங்கர் பேசியது குறித்து நான் தனிப்பட்ட முறையில் விளக்க கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு பெண் என்னை கடந்த 15 ஆண்டுகளாக தவறாக பேசிக் கொண்டிருந்ததை எல்லா ஊடகவியலாளர்களும் கவலைப்படாமல் கொண்டாடிக் கொண்டிருந்தீர்கள்.. அரசும் உட்பட.. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு.. எனக்கும் 2 பசங்க இருக்கிறார்கள்.. எனக்கு மனைவி, அம்மா, அப்பா, மாமியார் என எல்லோரும் இருக்கிறார்கள்.. ஆனால் அது குறித்து யாருக்கும் கவலையில்லை.
காவல்துறை உயர் அதிகாரிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.. அவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களது தந்தை குறித்து பொதுவெளியில் அவதூறாக பேசும் போது அவர்கள் எவ்வாறு அதனை எதிர்கொள்வார்கள்.. தங்கள் தோழிகளிடம் எப்படி பேசுவார்கள்.. காவல் உயர் அதிகாரி மற்றும் பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது.. அந்த கைது நடவடிக்கையை நான் எதிர்க்கவில்லை.. அதே நேரத்தில் குண்டர் சட்டம் போடும் அளவுக்கு இந்த பிரச்சனை ஒன்றும் பெரிதல்ல.. சமூகத்தில் காவல் அதிகாரியின் குழந்தைகளும் குடும்பத்தினரும் அதனை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது குறித்து சிந்தித்திருக்க வேண்டும் .. சங்கர் பேசியது தவறு என்றாலும்.. குண்டர் சட்டம் கஞ்சா வழக்கு என்பது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை .. சவுக்கு சங்கர் பேசியது தவறு என்றாலும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்ன தவறு செய்தார்? நான் பேசியதற்காக பேட்டி எடுக்கும் உங்களை கைது செய்ய முடியுமா?
இதுவரை எங்களை விமர்சிக்கும் திராவிட வாடகை வாய்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா? எங்கள் கட்சி குறித்து இழிவாக பேசியவர்கள், என்னை குறித்து இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? உங்களுக்கு ஒன்று என்றால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவீர்கள்? அடுத்தவர்களுக்கு என்றால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள்? ஃபெலிக்ஸ் என்ன தவறு செய்தார்.. என்னை கேள்வி கேட்கும் நீங்கள் எப்படி குற்றவாளியாக முடியும். ஜெரால்டை கைது செய்தது மிகப்பெரிய தவறு, ஜெரால்டை டெல்லியிலிருந்து சென்னை அழைத்து வருவதற்கு விமான டிக்கெட்டை நாங்கள் போட்டு தருகிறோம் என்று கூறினோம். ஆனால் ரயிலில் தான் அழைத்து வருவோம் என பிடிவாதமாக காவல்துறையினர் அழைத்து வந்திருக்கின்றனர். அவரது வீட்டில் சோதிக்க வேண்டிய அவசியம் என்ன? மண்ணையும் மலையையும் வெட்டி விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள், சாராயம் விற்பவர்கள் வீட்டில் சோதனை நடத்தாதவர்கள்.. பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? இது மிகவும் கொடுமை. இவ்வாறு அவர் கூறினார்.