வெற்றிமாறன், பா. ரஞ்சித் ஆகிய திரைப்பட இயக்குநர்களை, மற்றொரு தரப்பு இயக்குநர்கள் மிக மோசமாக விமர்சித்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலேயே தலைசிறந்த இயக்குநர் வெற்றிமாறன் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடிக்கும் கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள் பேரரசு, பிரவீன் காந்தி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள், இப்போதைய திரைப்படங்களில் சாதி அதிகமாக பேசப்படுவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக, வெற்றிமாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் வளர்ச்சி தான், தமிழ் சினிமாவின் தளர்ச்சி என்று இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்திருந்தார். இவர்கள் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தலைசிறந்த இயக்குநர் யாரென்றால், அது என் தம்பி வெற்றிமாறன் தான். அவனுக்கு படம் எடுக்க தெரியலைனா, வேற எவனுக்கு படம் எடுக்க தெரியும்? நான் ஒரு திரைக்கலைஞனாக சொல்கிறேன்.. வெற்றிமாறன் மாதிரி சிறந்த இயக்குநரே இந்தியாவில் கிடையாது. அவன் ஆகச்சிறந்த இயக்குநர். சும்மா ஏதாச்சும் பேசிட்டு இருக்காதீங்க.
ஏதோ என் தம்பிகள் வெற்றிமாறன், பா. ரஞ்சித் தான் சாதியை தூக்கிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தது போல பேசுறீங்க. ஏன் தமிழ்நாட்டில் சாதி இல்லையா? சாதி கொடுமைகள் இல்லையா? ஏதோ நாங்கள் தான் அதை எல்லாம் கண்டுபிடிச்சு இறக்குமதி பண்ற மாதிரி பேசிட்டு இருக்கீங்க. வேங்கைவயல், மேல்பாதிக்கு எல்லாம் போகலையா நீங்க? சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கக் கூடாது. இவ்வாறு சீமான் பேசினார்.