கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி.4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. 1958ஆம் ஆண்டில் கட்டி முடுக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் காந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டிசேரி எனும் இடத்தில், பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்துபட்டிசேரி அணை கட்டப்பட்டது. அதற்கு தமிழகத்தில் அனைத்துகட்சியினரும் கடும் ஆட்சேபனை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இடுக்கி மாவட்டம் பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனையடுத்து இம்முயற்சிக்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.