ஜூன் 1ஆம் தேதி நடக்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி!

ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ள இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் இறுதிகட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் பிறகு வரும் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஜூன் 1 அன்று ஆலோசனை நடத்த கூட்டணி கட்சியினருக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் கூறியதாவது:-

ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக இண்டியா கூட்டணியினர் முன்பே கூறியிருந்தனர். ஆனால் என்னால் அதில் பங்கேற்க முடியாது என்று அவர்களிடம் கூறிவிட்டேன். காரணம் அன்றைய தேதியில் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஒருபக்கம் புயல் நிவாரணப் பணிகள், இன்னொரு பக்கம் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது என்னால் எப்படி அங்கு செல்ல முடியும்? என்னுடைய முன்னுரிமை மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு தான். நான் இங்கே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டாலும், என்னுடைய மனம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தான் இருக்கிறது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.