கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

தமக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நேரத்தில் முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானா எம்.எல்.சி.யான கவிதா கைது செய்யப்பட்டார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் பெயரும் கூட டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் துணைக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதே வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றமும் ஜூன் 1-ந் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 1-ந் தேதிக்குப் பின்னர் கெஜ்ரிவால் சரணடைந்து சிறைக்குப் போக வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

இந்த நிலையில் தமது இடைக்கால ஜாமீன் காலத்தை மேலும் 1 வாரம் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கவும் கெஜ்ரிவால் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் நீதிபதிகளிடம் அவசர வழக்காக விசாரிக்க கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மேலும் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.