குளிர் காலத்தில் இருந்து கோடைக் காலத்திற்கு மாறும்போது நம்மில் பலருக்கு வறட்டு இருமல் உருவாகிறது. இந்த வறட்டு இருமல் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது.
பூவில் இருக்கும் மகரந்தம் நாசியில் புகும்போது வறட்டு இருமல் ஏற்படலாம். தூசியால் உண்டாகும் ஒவ்வாமையால் சிலருக்கு வறட்டு இருமல் உண்டாகலாம். புகைப்பிடிக்கும்போது வறட்டு இருமல் வரலாம். சளி மற்றும் காய்ச்சலின்போது ஜலதோஷம் உண்டாகலாம். காசநோயின்போது வறட்டு இருமல் உண்டாகலாம்.
வறட்டு இருமலைப்போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்:
வறட்டு இருமலைப் போக்க வீட்டில் செய்யவேண்டிய வீட்டு வைத்தியங்கள் குறித்துப் பார்க்கலாம்.
– எலுமிச்சை சாறு கலந்த தேநீரைக் குடிப்பதால் வறட்டு இருமல் மட்டுப்படும். தொண்டை வறட்சி நீங்கும்.
– வெந்தயம், சியா விதை, சீரகம் போன்ற பொருட்கள் மூன்றையும் ஒன்று சேர்த்து, பொடியாக்கி சூடான நீரில் கலந்து குடிக்க வறட்டு இருமல் தொல்லை குறையும்.
– வறட்டு இருமலை மட்டுப்படுத்த வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாய்க் கொப்பளிக்கவும்.
– தேன் கலந்து எலுமிச்சை தேநீரைக் குடிக்க, வறட்டு இருமல் குறையும்.
– சூடான நீரில் இஞ்சித்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து, அதில் தேன் கலந்துகுடித்து வர வறட்டு இருமல் நீங்கும்.
– அதிமதுர வேரிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர், தொண்டையில் உண்டாகும் இருமலைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
– ஓமம், ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்தது. வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணம் தரும் பொருளாக ஓமம் இருக்கிறது. ஓம இலைகளுடன் தேன் சேர்த்து எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்க வறட்டு இருமல் குறையும்.
– புதினா இலைகளை, நீரில் வேக வைத்து அதில் இருந்து வரும் புகையை சுவாசித்தால் வறட்டு இருமலுக்கு நல்ல பலன் தரும்.
– புதினா இலைகளைப் பயன்படுத்தி சூடான நீரை உட்கொண்டால், வறட்டு இருமல் குறையும்.
– கிராம்பு, ஏலக்காய், துருவிய இஞ்சி, இலவங்கப்பட்டை, அரை கப் நீர், தேயிலை சிறிதளவு, சர்க்கரை , இரண்டு கப் பால் சேர்த்து மசாலா தேநீர் தயார் செய்துகுடித்தால், வறட்டு இருமல் குணம் அடையும்.