அறுவை சிகிச்சைக்கு பிறகு வைகோ நலமுடன் உள்ளார்: துரை வைகோ!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது என அவரது மகனும் மதிமுக முதன்மை செயலருமான துரை வைகோ கூறியுள்ளார்.

மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 25ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வைகோ அங்கு நிர்வாகியின் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது வீட்டின் மாடிக்குச் செல்வதற்காக படிக்கட்டில் ஏறிய போது கால் இடறி அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து அங்கிருந்து நிர்வாகிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து வைகோவின் வயது மற்றும் உடல்நிலை கருதி அவரை விமான மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் வைகோ சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் லேசான எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள்.

இந்நிலையில் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது என அவரது மகனும் மதிமுக முதன்மை செயலருமான துரை வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

தலைவர் வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார்..! இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள். நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

தலைவர் அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.