கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக மனு அளித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தல் 57 லோக்சபா தொகுதிகளுக்கு வருகிற ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 7வது மற்றும் இறுதிக்கட்ட லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதற்காக வருகை தர உள்ளார்.
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (மே 30 ஆம் தேதி) மாலை திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கன்னியாகுமரி வருகை புரிகிறார். பின்னர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31 ஆம் தேதி தியானம் செய்கிறார். ஜுன் 1 ஆம் தேதி தியானம் முடிந்து அன்று மாலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும், இந்திய கடற்படையினரும், கடலோர குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி காட்சி முனை, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகிய பகுதிகலுக்கு படகுகளில் செல்லவும், சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்குமிடங்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் இந்த நிகழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சித் தலைமையின் அனுமதி உடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் திமுக வழக்கறிஞர் அணியினரின் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.