இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐ.நா. விருது!

இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ராதிகா சென்னுக்கு ஐக்கிய நாடுகளின் 2023-ம் ஆண்டுக்கான ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது இன்று வழங்கப்படுகிறது.

ஐ.நா. மூலமாக அமைதி காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த மேஜர் ராதிகா சென் மகளிர் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்காக முன்னெடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது. ஐ.நா. சபை அமைதி காக்கும் சர்வதேச நாளான இன்று (மே 30), மேஜர் ராதிகா சென்னுக்கு நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் விருது வழங்கி கவுரவிப்பார்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராதிகா சென் மும்பை ஐஐடியில் பயோடெக் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். ஐஐடியில் படிக்கும்போது ராணுவத்தில் இணைய முடிவெடுத்தார். 2016-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் செயல்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்திய ரேப்பிட் டெப்லாய்மென்ட் ஆயுதப்படை பிரிவு தளபதியாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2024வரை பணியாற்றினார்.

இந்நிலையில், ஐநாவின் மதிப்புமிக்க ராணுவ பாலின சமத்துவம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு விருது பெறும் இரண்டாவது இந்தியர் இவரே. முன்னதாக மேஜர் சுமன் கவானிக்கு கடந்த 2019-ல் இந்த விருது வழங்கப்பட்டது.