திமுக ஆட்சியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைஓங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். கடந்த 36 மாத திமுக ஆட்சியில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஓங்கி இருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச்சாராய சாவுகள், கோவையில் கார் குண்டு வெடிப்பு, அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுடன் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரம் என்று நாள்தோறும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சம்பந்தமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், காவல் துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். தற்போதுள்ள ஆட்சியாளர்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற துணிச்சலோடு சமூக விரோத சக்திகள் ஆட்டம் போடுகின்றன. மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது.
பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகச் செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளமுடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழகம் முழுவதும் இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு காவல் துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்கத்தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.