முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்பு குழு சார்பில் ஆய்வு நடைபெற உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையை கண்காணித்து பராமரிக்க கடந்த 2014-ல் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. பின் 2022-ல் இரு மாநில தொழில் நுட்ப வல்லுநர்களையும் சேர்த்து மூவர் குழு, ஐவர் குழுவாக மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு, கேரள நீர்ப்பாசனத் துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் 27-ல் பெரியாறு அணையை ஆய்வுசெய்தனர். இதையடுத்து, நடப்பாண்டு மார்ச் 18-ல் ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 13, 14-ல் கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.