அதிமுக ஆலமரம்.. ஜூன் 4க்கு பிறகும் இங்க தான் இருப்போம்: ஆர்பி உதயகுமார்!

அதிமுக என்ற ஆணிவேர் 2 கோடி தொண்டர்களால் உருவான ஆலமரம்.. அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் எனவும், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக தமிழகத்தில் தான் இருக்கும், சந்தேக வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,”ஜூன் 4-க்கு பின்னர் அதிமுக எங்கே இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். அதிமுக, பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் பார்ப்போம்” என்றார். மேலும், எந்தக் கட்சி மக்கள் மனதை பிடித்திருக்கிறது. எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்பதை பார்ப்பீர்கள். விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும் என்பர். அதனால் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்” என கூறியிருந்தார்.

இதையடுத்து அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

ஜூன் 4க்கு பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்கே இருக்க போகிறது என்று வாய் கூசாமல் இன்றைக்கு ஒருவர் (அண்ணாமலை)பேசிக் கொண்டே இருக்கின்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசினால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசாத நாளே இல்லை என்கிற ஒரு நிலையில் இருக்கிறது.

4ம் தேதிக்கு பிறகு அல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் இயக்கமாக இந்திய திருநாட்டில் அன்னைத் தமிழகத்தில் வெற்றி கொடி நாட்டும் என்பதை அண்ணாமலை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக நிலை என்ன என 4ம்தேதிக்கு பிறகு தெரியும் என்று சொல்லுகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை மக்கள் சேவையே கழகத்தினுடைய ஒரே கொள்கையாக வைத்து செயலாற்றி வருகின்றோம். அதிமுக அணைய போகும் விளக்கு அல்ல அணையா விளக்கு.

அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. இன்றைக்கு வரலாறை படித்து பேசுவதை காட்டிலும் குறிப்பெடுத்து பேசுகிற தலைவராக அவர் இருக்கின்றார். தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது விளம்பர வெளிச்சத்தில் அரசியல் நடவடிக்கைகளை அவர் உருவாக்குகிறார். அண்ணாமலை ஆற்றிய சேவைகள் என்ன? இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அண்ணாமலை அவர்கள் தாய் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்ன? மக்கள் தொண்டு என்ன? என்று சொன்னால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்வதற்கு கூட தயங்கவும் மாட்டோம்.

நீங்கள் எங்களை அழிக்க நினைத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்பைவிட மிக வலிமையாக எடப்பாடியாரின் தலைமையிலே விஸ்வரூபம் எடுத்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறியக்கூடிய காலம் மிகத் தொலைவில் இல்லை.. இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து நீங்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து எல்லோரையும் வசை பாடுவதை தான் வேலையாக வைத்திருக்கிறீர்கள்.

இதையெல்லாம் சொல்ல வேண்டிய அண்ணாமலை அம்மாவின் புகழை சொல்வதாக சொல்லி இன்றைக்கு அதில் ஏதேனும் திசை திருப்புகிற முயற்சியை மேற்கொள்வீர்கள். ஆனால் அம்மாவின் ஆன்மா ஒருபோதும் உங்களை மன்னிக்காது. இந்த 52 ஆண்டுகளில் எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து அழிந்து காணாமல் போயிருக்கிறது. வளராமலே காணாமல் போயிருக்கிறது. ஆனால் அதிமுக என்பது ஆணிவேராக 2 கோடி தொண்டர்கள் ஆலமரமாக நின்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் .ஆணிவேரை நீங்கள் அசைத்துப் பார்க்க முடியாது தொட்டுப் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.