இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பத்ரிநாத் கோயிலில் வழிபட்டார்.
நடிகர் ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படத்தில் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இதில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து ஓய்வுக்காக ரஜினிகாந்த் அபுதாபி சென்றார். சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு கடந்த 28-ம் தேதி சென்னை திரும்பினார்.
ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கொரோனா காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் தனது நண்பர்களுடன் மீண்டும் அங்கு சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அவர் தனது நண்பர்கள் ஸ்ரீஹரி உள்ளிட்டோருடன் இமயமலைக்கு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதற்கும் ஆன்மிகம் தேவை என்று கூறினார். விமானம் மூலம் டேராடூன் சென்ற அவர் அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றார். அங்கு, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்துக்குச் சென்று வழிபட்டார். பின்னர் பத்ரிநாத் சென்ற அவர் அங்குள்ள கோயிலில் வழிபட்டார். அவரை அங்கு சந்தித்த பக்தர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அடுத்து, கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். ஜுன் 3 அல்லது 4-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.