அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருக்கும் ஆர்லண்டோ நகரைச் சேர்ந்தவர் ரெக்கி மப்ரி( 26). இவர் ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் இரண்டு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ரெக்கி மப்ரியின் மனைவி, அயலா கைது செய்யப்பட்டார். அவர் மீது, கொலைக்கு காரணமாக இருந்தது, வீட்டில் போதை பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மூன்று குழந்தைகளின் தாயான அயலாவின் அஜாக்கிரதை தான் ஒரு உயிர் பறிபோக காரணம்; எனவே அவர் குற்றவாளி’ என தெரிவித்தார்.
இனி மூன்று குழந்தைகளும் தாய், தந்தையின்றி வளர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் ஒரு குழந்தை, தந்தையை கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்வில் வளர்வது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். ரெக்கி மப்ரி தம்பதியர் ஏற்கனவே குழந்தைகளிடம் அக்கறையின்றி இருந்தது, போதை பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில்தண்டனை அனுபவித்தவர்கள் என, போலீசார் தெரிவித்தனர்.