இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட கூட்டணி இந்தி கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இன்று பொறுப்பற்ற கூட்டணியாக மாறி, மக்களின் எதிர்ப்பை பெற்று வெற்றி கிட்டாது என்ற பதற்றத்தின் முகட்டில் நிற்கிறார்கள் என முதலமைச்சர் முக ஸ்டாலினை பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் ஏழாம் மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெறுகிறது. இதில் ராகுல்காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுகவின் டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது. தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன” என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தி கூட்டணி பதற்றத்தின் முகட்டில் நிற்பதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது:-
பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு கால பாசக்கார ஆட்சியை வீழ்த்தி இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட கூட்டணி இந்தி கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இன்று பொறுப்பற்ற கூட்டணியாக மாறி, மக்களின் எதிர்ப்பை பெற்று வெற்றி கிட்டாது என்ற பதற்றத்தின் முகட்டில் நிற்கிறார்கள்.
பல்லாண்டுகாலமாக தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இயங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு எதிராக ஜனநாயகத்தின் சாமானிய மக்களின் கட்சியாக உருவெடுத்த பாஜக இன்று அசுர பலம் பெற்று அசராமல் மக்களுக்கு பணியாற்றும் பிரதமரைக் கொண்டு அதிக பலம் கொண்ட அணியாக தேர்தல் களத்தில் வலம் வருகிறது.. பலம் பெற்றிருக்கிறது.. தங்களது இடைவிடாத அயராத உழைப்பால் மாண்புமிகு பாரதப்பிரதமரும், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் இந்தி கூட்டணி உருவாக்கிய போலி பிம்பத்தை உடைத்தெறிந்திருக்கிறார்கள்.
பாஜக கூட்டணியின் வெற்றி செய்தி எழுதப்பட்டுவிட்டது. அதிகாரப்பூர்வமாக நமக்கு வெற்றி கொண்டாட்டங்களுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிக விழிப்புணர்வுடன் பாஜக கூட்டணி கட்சியினர் இருக்க வேண்டும். ஏனென்றால் மக்களால் ஏற்றம் பெற்ற நாம். மக்களை ஏமாற்றியே அரசியல் செய்யும் கூட்டத்தோடு மோதுகிறோம். ஜூன்-4 இந்தியாவின் விடியல் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அங்கம் வகிக்கும் இந்தி கூட்டணியின் முடிவுக்கு ஆரம்பமாகவும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 10 ஆண்டுகால நிறைவான, நிலையான ஆட்சிக்கு பதினொன்றாம் ஆண்டு வெற்றி தொடக்கமாக அமையும்.
இந்த இந்தி கூட்டணி வெற்றி பெறாத வெற்று கூட்டணி என்பதை அதன் தலைவர்களை உணர்ந்து விட்டார்கள். பிரதமரை ஒரே நாளில் தேர்ந்தெடுப்போம் என்று முடியாத கதையை பேசிக் கொண்டிருப்பவர்கள்.. ஒரே நாள் கூட்டத்தில் கூட கூட முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் தமிழகத்தில் இருந்தும் முதல்வர் கலந்துகொள்ள பொருள் ஒன்றும் இல்லை என்று பொருளாளரைத்தான் அனுப்பும் நிலை. இதுவே இந்தி கூட்டணி. வெல வெலக்கும் கூட்டணி இந்தி கூட்டணி என்றும். பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் உணர்த்துகிறது. விடியல் என்று கூறியவர்கள் இன்று தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டு ஒப்புக்கு நடக்கும் கூட்டம் தான் டெல்லியில். ஒப்பில்லாத பாரதப்பிரதமர் மோடி அவர்களை போன்று ஒப்பானவர் யாருமில்லை என்பதை இந்திய அரசியல் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்தி கூட்டணி வலுவிழந்து போய்க்கொண்டிருக்கிறது. மறுபடியும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் பாரத தேசம் மேலும் வலுவடையப் போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.