வெற்றி பெறப்போகிறவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்: ஆர்எஸ் பாரதி!

வெற்றி பெறப்போகிறவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அதனால் தான் விழிப்புடன் இருக்குமாறு எங்கள் முகவர்களை அறிவுறுத்தி வருகிறோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள், திமுக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்த ஆலோசனை நடைபெற்றது. லோக்சபா தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்தக் கூட்டத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர் இளங்கோ எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சி வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோர் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக வாக்கு எண்ணிகை முகவர்களுக்கு இன்று முக்கியமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். வாக்கு எண்ணிக்கை முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ எம்.பி ஏறத்தாழ ஒரு மணி நேரம் அறிவுரைகளை வழங்கினார். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் எங்களை செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம். எதையும் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் தமிழ்நாட்டில் அசம்பாவிதம் எதுவும் நடக்காது. அவர்கள் எதையும் செய்யக்கூடியவர்கள் என்பதால் தயார் நிலையில் இருக்கிறோம். முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டுள்ளது. எங்கள் வெற்றியை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது. உழைப்பு வீண்போய் விடக்கூடாது. வெற்றி பெறுபவர்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.