தமிழ்நாட்டில் பாஜக ஒருசில இடங்களை வெல்லும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறோம் என்பது உண்மை என்று கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பான எக்ஸிட் போல் முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி தான் முன்னிலையில் இருக்கிறது. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 35+ இடங்களை திமுக கைப்பற்றும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் அதிமுகவும், பாஜகவும் போட்டிப் போட்டு கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது:-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் எண்கள் மட்டுமில்லாமல் மக்களின் எண்ணங்களை போல் இந்தியாவில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என கூறப்பட்டிருக்கிறது எனக்கு இது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் தேர்தல் கருத்துக்கணிப்பின் மீது நம்பிக்கை கொண்டு இருந்தாலும் இன்னும் நிறைய இடங்களை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறோம் என்பது உண்மை. தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை உயர்த்தப் போகிறோம் என்பதும் உண்மை. தமிழகத்தில் இன்னும் கூடுதலாக வெற்றி பெறும் போகிறோம் என்பது உண்மை.
கூட்டணியில் ஒரு திராவிட கட்சி இருந்தால் மட்டுமே வெற்றி என்கின்ற நிலைமையை மாற்றி பாரதிய ஜனதா கட்சி தனித்தன்மையோடு இன்னும் இடங்களைப் பெற இருக்கிறோம் என்பது உண்மை. இதற்கு முன்னதாகவும் திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் ஒரு கூட்டணி அமைத்திருந்தோம். அதேபோல் இப்போதும் நடைபெற்று இருக்கிறது. இது எங்களின் வெற்றிக்கான அடித்தளம் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
295க்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும் என காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், “கனவு காண்பது என்பது அவர்களுடைய உரிமை. ஆனால் காங்கிரஸ் கட்சியின் கனவெல்லாம் நனவாகாது. அதனால்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியே வந்த பிறகு அவர்கள் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை” என பதில் அளித்துள்ளார்.